Thursday, 29 December 2011

CMRS - 4


CMRS - 4

       "சீனுவும் சுண்டுவும்." - ( சின்னமனூர் - 1786.)

டேய் கடங்காரா, பாதி சாப்பிடரப்போ ஓடி ஓடிப் போறயேடா....
எப்போ நான் உனக்கு ஊட்டி முடிச்சு மத்த வேலயை கவனிக்கிறது?
சீனு, நீ போய் உன் தம்பியை நாலு மொத்து மொத்தி இழுத்துண்டு வா..

ஏன் அத்தை, சீனு எங்கே இருக்கான்?....நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர....
அவன்தான், அவனோட சினேகிதப் படையோட,
அப்பவே கிளம்பி வெளிய போயிட்டானே.
வேணும்னா, நீங்க உங்க பிள்ளயை கூப்பிட்டு,
ரெண்டு அதட்டல் போடச் சொல்லுங்கோ.
நான் எதைச் சொன்னாலும் அவர் இப்போ எல்லாம்
காதிலேயே வாங்கிக்கிறது இல்லை.
ஏதோ மோட்டு வளையைப் பார்த்து யோசிச்சு கொண்டு இருக்கிறார்.-
பதில் சொல்லரது இல்லை.

லக்ஷ்மி, நீ சொல்லரது ரொம்ப சரி.
நானும் கூட கவனிச்சேன். - நாணா முன்னை மாதிரி இல்லை.
முக்கியமா, அவன் அப்பா போனஅப்புறமாகத் தான் இப்படி இருக்கான்.
என்னை விடவா ? - நானே துக்கம் கொண்டாடரத விட்டுட்டேன்.
கொழந்தைகள்தான் முக்கியம் அப்பிடின்னு என்னை மாத்திக்கில்லயா...

ஆமா அத்தை. - எனக்கு என்னவோ வேற காரணம் இருக்குனு படரது.
மாமா படுத்த படுக்கையா இருந்தப்போ ஒரு நாள் ஞாபகம் இருக்கா?
நாம எல்லோரையும் வெளியே இருக்கச்சொல்லிட்டார்.
தன் பிள்ளயோட தனியா ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தார்.
அதுக்கு அப்புறமே இவர் மாறித்தான் போயிட்டார்.
நான் கேட்டாக் கூட மழுப்பலா பதில் சொல்லறார்.

சரி விடு. நாணாவுக்கு பொறுப்பு அதிகம் ஆயிடுரது பாரு. அதுதான்.
அவன் தன் கவலயை வெளிய சொல்லிக்க மாட்டான்.

"பாத்தீ நேக்கும் தோசை தா பாத்தி"  ---
மூன்று வயது குழந்தை காமுவின் குரல்.
அதை கேட்டதும் பாட்டிக்கு சுண்டுவின் நினைவு வந்து பார்த்தால்...
அவனைக் காணவில்லை. - ஓடிப்போய்விட்டான் கடங்காரன்..
 
கோபம் குழந்தைபேரில் திரும்பியது.
சனியனே.. உனக்கு என்னடி அவசரம்.....துக்கிரி....தோசி ஜாதகம்...
பிறக்கற போதே அம்மாவை முழுங்கிட்டு, தோசையாம் தோசை....

ஓன்றும் புரியாமல், காமு மலங்க மலங்க முழித்துக் கொண்டு இருந்தாள்

வேகமாக சமையலுள்ளிலிருந்து ஓடி வந்து, காமுவை தூக்கிக்கொண்டு,
காமுவின் பாட்டி, அதே வேகத்தில் உள்ளே போய்விட்டாள்.
பின் தொடர்ந்த நாணாவின் மனைவி லக்ஷ்மி,
பேசவேண்டாம் என்று சைகை செய்து, குழந்தையின் கையில்
தோசை விள்ளல் கொடுத்து, பின்புறம் போகச்சொன்னாள்.

நிற்க,
ஐந்து வயது வாண்டுப் பயல் சுண்டு பேரில தப்பே சொல்ல முடியாது.
அவன் சமர்த்தாக வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தான்.
பாட்டி கொடுக்கிறது என்னன்னு கூட பார்க்காம சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
அதே சமயம், அவனோட ஒரு கண் மட்டும்,
கூடத்துல அடுக்கி வைத்திருந்த சாக்கு மூட்டைகள் மேல் இருந்தது.

பாட்டிதான் அவனுடய திறந்த வாயைப் பார்க்காமல்,
அம்மா வாயைப் பார்த்து பேசிண்டு இருந்தாள்.

இப்போது, அவன் எதிர்பார்த்துக் காத்திருந்தது நடந்தது
ஒரு மூலையில் இருந்து ஒரு சுண்டெலி ஓடி வந்தது.
தூரத்தில் நின்று, ஒரு கணம் சுண்டுவை கேலியாகப் பார்த்தது.
பிறகு, அரிசி மூட்டைகளுக்குள் பதுங்கியது.

சுண்டுவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
இந்த முறை விடுவதில்லை என்று ஆவேசம் வந்தது.
தோசையை மறந்தான். பாட்டியை மறந்தான்.
சுண்டு, எலி வேட்டைக்கு தயார் ஆனான்.

ரொம்ப நாளாவே ஒரு சுண்டெலி, சுண்டுவின் விரோதியாக விளங்கியது.
போன ஜன்ம பகையை இந்த ஜன்மத்தில் தீர்த்துக் கொள்ளத்தான், அந்த எலி,
சுண்டுவின் வீட்டுக்குள் குடி புகுந்துவிட்டது எனலாம்.

அதற்குக் காது மிகவும் கூர்மை.
காலடி சத்தத்திலிருந்து வருவது யார் என்பது எலிக்கு தெரியும்.

முக்கியமாக, சுண்டு தனியாக வருவது தெரிந்து, திடீரென்று குதித்து,
அவன் காலில் ஏறி தாண்டிக் குதித்து மறைந்துவிடும்.

சுண்டு பயந்து போய், உளறி அடித்துக் கொண்டு, இங்கும் அங்கும் பார்ப்பான்.
அரிசி மூட்டை இடுக்கில் ஒளிந்து கொண்டு சுண்டெலி சுண்டுவைப் பார்க்கும்.
இது சுண்டெலிக்கு பிடித்த பொழுது போக்கு.

ஓரு நாள், தன் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வது
அந்த எலி என்பது தெரிந்தது.
தன்னை விட ஏழு வயது பெரியவனான சீனு அண்ணாவை,
தம்பி சுண்டு சரண் அடைந்தான். யோசனை கேட்டான்.

வாய் விட்டு சிரித்த சீனு,
தம்பிப் பயலுக்குத் தைரியம் கூறினான்.

நீ சிங்கமா இல்லை எலியா?
நான் சிங்கம்.

சிங்கம் என்ன செய்யும்? ஓடிவந்து பாயுமா?...
இல்லை ஓடிப்போயி ஒளியுமா?

சிங்கம் பாயும்..... எலிதான் ஓளிஞ்சுக்கும்.

சரி. - நீ ஒரு ஆம்பளை சிங்கம் - இல்லையா?
ஆமா.

அதுனால பயம்தான் உன்னைக்கண்டு பயப்படணும்...புரிஞ்சதா?
புரியல்லை.

அதாவது, தைரியமா இருந்தாத்தான், நீ சுண்டுப் பயல்.
நீ சுண்டெலிக்கு பயப்படறேன்னு வெளிய தெரிஞ்சா உன்னை எல்லோரும்
சுண்டைக்காப் பயலேன்னுதான் கூப்பிடுவா. -பரவா இல்லயா.?

நான் என்ன செய்யணும்?

பயத்தை கீழே போடு  - தைரியத்தை கையிலே எடு.
தைரியம் எங்கே இருக்கு?

அப்படிக் கேளு. - வா என் கூட. - காட்டுகிறேன்.

சீனு பின்கட்டுக்கு நடந்து போக, சுண்டு பின் தொடர்ந்தான்.
மூலையில் இருந்த, பாட்டியின் புடவை உலர்த்தற கம்பை,
கையில் எடுத்தான்.

பாரு இப்போ, என்று சொல்லிக் கொண்டே சீனு கம்பைச் சுழற்றினான்.
அரிசி மூட்டைகள் மீது மாறி மாறி, பளீர் பளீர் என்று சாத்தினான்.
பிறகு, மூட்டை இடுக்குக்குள் கம்பு நுனியை வைத்து குத்தினான்.

அத்தனை எலிகளும், நில நடுக்கம் வந்து விட்டது என்று பயந்து,
சுவரை ஒட்டிய மூட்டைகளுக்கு அடியில் ஓண்டிக்கொள்வதை,
சுண்டு கவனித்தான். அவனுக்கு தைரியம் பிறந்தது.

அதன் விளைவு, இன்று தனியாக எலி வேட்டையில் இறங்கிவிட்டான்.
அவனுக்கு புடவை கம்பை தூக்கவே சக்தி இல்லை. ஆதலால் மெதுவாக,
கம்பை தரையில் தேய்த்தபடி சென்று மூட்டை அடியில் குத்தினான்.
அது சரிவராமல், தரை மட்டத்துக்கு படுத்துக்கொண்டு கம்பை செலுத்தினான்.

குறும்புச்சிரிப்புடன் ஒரு சுண்டெலி குதிர் மேல் ஏறி குனிந்து பார்த்தது.
தரையில் படுத்துக் கொண்டு இருந்த சுண்டுவின் முதுகில் குதித்தது.

அலறி அடித்துக்கொண்டு உருண்ட சுண்டுவின் கையில் இருந்து நழுவி, தரையில்உருண்டு சென்ற புடவைக் கம்பு,
தோசை விள்ளலை ரசித்து சாப்பிடுக்கொண்டிருந்த
காமு பாப்பாவின் மேல் லேசாகப் பட்டுவிட்டது.

காரணம் இல்லாமலே அழப்பிடிக்கும் காமு,
இப்போது ஓ என்று வீறிட்டு அலறினாள்.
சுண்டு, பின்புறமாக ஓட்டம் பிடித்தான்.

" மாமா..மாமா..., இந்த சுந்து அன்னா என்னை கம்பால அதித்தான் ".....
என்று அழுது கொண்டே வந்த காமுவை, வெளிவாசல் முற்றத்தில்,
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த நாணா ஐயர் தூக்கி எடுத்து,
அணைத்துக் கொண்டு சமாதானம் செய்தார்.

அவருக்கு மீனுவின் ஞாபகம் வந்தது. - கண்ணில் நீர் ததும்பியது.
இதே வயதில் இதே மாதிரி மீனுவும் அழுது கொண்டே வருவாள்.
அண்ணா ..என்றுதான் கூப்பிடுவாள். தன் மீது மிகவும் பிரியம்.
தனக்கு தங்கை தம்பி இல்லததால் நாணுவுக்கும் மீனு மீது பிரியம் உண்டு.

தன்னுடய தாயார் மீனுவை காரணமமே இல்லாமல் கடிந்து கொள்வதால்,
அந்தக் குழந்தை மீது அனுதாபம் அதிகம்.
அதைவிட மீனாவின் தாயார் மீது அனுதாபம் அதிகம்.
இளம் விதவையான அவள் நாணாவின் அப்பாவிற்கு தூரத்து உறவு.
இப்போது கையில் குழந்தையுடன் அடைக்கலம் தேடி அங்கு வந்துவிட்டாள்.

தன் கல்யாணத்தின் போதுதான் மீனுவுக்கும் கல்யாணம்.
அவளுக்கு அப்போது வயது ஒன்பது.
மீனாவின் புகுந்த வீடு வைகை ஆற்றின் அக்கரையில் இருந்த
தென்கரை-சோழவந்தான் என்ற கிராமம்.

மணம் ஆகி பதினைந்து வருஷம் கழித்து தலை பிரசவத்தில் மீனு போய்விட,
மீனுவின் கணவன் மறு கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்.

அச்சாக அவளே போல் இருக்கும் மீனுவின் குழந்தை காமு,
இப்போது இவர்கள் வீட்டுக் குழந்தை.

நாணாவிற்கு விருப்பமான கடமை, காமுவை வளர்த்து
நல்ல ஒரு பையனுக்கு,
கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது.
ஆனால் அவசரப்படக் கூடாது.
காமுவுக்கு எழுதப் படிக்க சொல்லித்தர வேண்டும்.

பதினெட்டு வயதில் கல்யானனம் செய்தால் போறும்.
தன் மனைவி லக்ஷ்மிக்கும் தில் இதில் முழு சம்மதம்.
தன் தாயாருக்கு அது தெரியவேண்டியது இல்லை.

தூங்கிப்போய்விட்ட காமுவை, மீனாவின் அம்மா வந்து எடுத்துக் கொண்டாள்.
நாணா மறுபடி பழைய நினைவுகளில் மூழ்கினார்.
மதுரை நகரை விட்டுப் பிரிந்த நாள் முதல் நடந்த சம்பவங்கள்...26 வருட நினைவுகள், அவரது மனத் திரையில் ஓட ஆரம்பித்தன.

....தொடரும்.....(ஆனால், அவசியம் இருந்தாலன்றி, தமிழில் அல்ல.)

No comments:

Post a Comment